Monday, February 1, 2010

உண்மையை எப்படிக் கண்டுகொள்வது?


ஒரு மாணவன் குருவைப் பணிந்தான்!

"குருவே! நான் உண்மையை எப்படிக் கண்டு கொள்வது?"
என்று வினவினான்!

குருவும் பதில் சொல்லலானார்!

என் அன்புக்குரிய மாணவனே!
நீ மிகவும் அற்புதமான கேள்வியைக் கேட்டிருக்கிறாய்!
உண்மையை கண்டு கொள்வது மிகவும் எளிதானது;
மிகவும் கடினமானதும் கூட!

ஆம்!
உண்மையை கண்டுகொள்வது
உணமையானவர்களுக்கு
மிகவும் எளிதானது!
உண்மையற்றவர்களுக்கோ
அதைத் தெரிய வாய்ப்பில்லாததனால்
அது மிகவும் கடினமானது!

ஒரு மகா சமுத்திரத்தில்
எண்ணிக்கையற்ற மீன்களுக்கிடையில்
தன் தாயை மீன் குஞ்சுகள் கண்டு கொள்வதைப் போல
உண்மையை உண்மை, தானே கண்டுகொள்ளும்!
இடையில் ஒருவர் இருந்து கொண்டு
இதுவே உன் தாய் என்று
எவரும் உறுதிப் பாத்திரம் தரத் தேவையில்லை !

உண்மையின் குணாம்சமே அதுதான். சிறப்பும் அக்தேயாம் !
உண்மை தன் காலில் தான் நிற்க வல்லது!
உண்மை சுய நிரூபணம் உடையது.
உண்மை சுயம்ப்ரகாசமானது; அடக்கமானது.
இயல்பானது!

அதாவது தங்கத்தை உதாரணத்திற்கு
எடுத்துக்கொள்வோம்!
உண்மைத் தங்கம் பித்தளைகளின்
விளம்பர உதவியை நாடுவதில்லை!
அதைப் பார்த்த மாத்திரத்திலேயே
அது தங்கம்தான் என்று
தானாகவே தெரிந்து விடுகிறது!

ஆனால்,
பொய்க்கோ விளம்பரம், ஆடம்பரம், நடிப்பு
தேவைப்படுகிறது!
மேலும்
பொய்க்கு மின்ன வேண்டிய அவசியம் உள்ளது!
தன்னை பிறர் நம்ப வேண்டும் என்ற காரணத்தால்
தொடர்ந்து ஏதோ ஒரு 'ஒப்பனை' செய்து கொண்டே இருக்கிறது!
எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக பொய்
ஏதேனும் சாகசங்களில் ஈடுபடுகிறது.
மற்றவர்களின் புகழ்ச்சிக்காக
அது எந்நேரமும் ஏங்குகிறது!

ஊரிலேயே பேரழகும் பேரறிவும் ஒருங்கே அமைந்த
ஒரு இளம்பெண்
எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு
இழுத்துப் போர்த்தியவாறு வீதியில் நடந்து செல்கிறாள்!
அவளது ஆடை அணிகலன்கள் எளிமையானவை.
யாருடைய கண்களையும் அது உறுத்துவதில்லை!
சப்தமிடும் கொலுசு அணிந்து
மற்றவர்களின் கவனத்தை அவள் கவர்வதில்லை!
கூடை கூடையாய் கொண்டையில் பூக்களை ஏற்றி
வண்டுகளை அவள் ஈர்ப்பதில்லை!
அர்த்தமற்ற வெறும் பேச்சுகளில் சில்லறை சிரிப்புகளை
வலியக் கலந்து காற்றில் விடுவதில்லை!

அவளது வாழ்வும் பயணமும் ஒரு தென்றலின் கவிதை!
அவள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை!
'பாதச் சுவடுகளே தென்படாத'
"பறவை பறந்த வானம் போல"
நிர்மலமானது அவளின் வாழ்க்கை!
உயிரும் உணர்வும் உள்ளவன் மட்டுமே
காத்திருந்து ஒருநாள்
அவளைக் கண்டு கொள்கிறான்!
இறந்து போனவர்களும்
ஆடம்பரச் சீமான்களும்
அவளைக் காணமாட்டார்கள்!

அதே ஊரில் ஒரு குணமிலியும் இருக்கிறாள்!
அழகும் அறிவும் குறைந்தவள்!
எனவே,
அவற்றைத் தன்னிடம் இருப்பதாகக்
காட்டிக்கொள்ள விழைகிறாள்!
அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிகிறாள்!
கண்கூசும் நிறங்கள், சப்தமிடும் அணிகலன்கள் கொண்டு
மற்றவர்களின் கவனத்தை கவர்கிறாள்.
கூடை கூடையாய் தலையில் பூ வைத்துக் கொள்கிறாள்!
வேண்டுமென்றே யாரையோ ஈர்பதற்காக
திடீரென்று வலியச் சிரிக்கிறாள் !
திருத்தமாய் பேசி தன்னை
அறிவு மிகுந்தவளாகக் காட்டிக்கொள்ள,
பாவம்! எப்போதுமே முயற்சிக்கிறாள்!

அவளது வாழ்வும் பயணமும் ஒரு சூறாவளியின் மிச்சம்!
அவளுடைய முழு வாழ்வும் ஒரு திறந்த நூலகப் புத்தகம்;
சிறந்த புத்தகம் அன்று!
தீயவர்களே அவளைப் படிக்கிறார்கள்.
பக்கங்களை மடிப்பதும் கிழிப்பதுமாக
மரியாதை இன்றியும்
நடந்து கொள்கிறார்கள்.
கடைசியில் அந்தப் புத்தகம்
தூக்கி எறியப்பட்டு குப்பைக்குப் போகிறது!

எல்லாப் பொய்களுக்கும் இதுவே முடிவாகும்!
உண்மையோ,
கோவிலின் கர்பக்கிருகத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும்!
உண்மையை
உண்மையே கண்டு கொள்ளும்'
என்றார் குரு!

-மோகன் பால்கி

1 comment:

  1. உண்மையை உண்மையே கண்டு கொள்ளும்; நான் தங்களைக் கண்டு கொண்டேன்.

    அன்புடன்,
    முரளி (அடடே) மனோகர்

    ReplyDelete