(சிறு வயதில் சிறுகதைகள் எழுதியதுண்டு. இது திடீர் என்று சில மாதங்களுக்கு முன் வந்த கதை. சும்மா நீங்களும் படியுங்கள்!)
தீய்த்துக் கரிக்கும் கத்திரி வெயில்!
கோடை அரவு தீண்டிய வெம்மையிலும் வண்டி சரித்து வாகாய் வளைந்து
அங்கு கூடி இருந்த பாண் பராக் புகையிலை துப்பி சீரழிந்திருந்த
நாயர் டீக்கடை வாசல் பக்கம் நிறுத்துகிறேன்
தேநீர் பருகுவது ஒரு வித escapism என்று சொல்லிக் கொள்ளலாம்தான்...
திவாரி நித்தியாநந்தன் முதல் டெல்லி ஐ நா வரை அலசும் சிகரெட்டுப் புகை..
பட்டும் படாமலும் நானும் அமர்ந்து மூன்று நான்கு மடக்கு தேநீர் முழுங்கிக் கொண்டே செல் போன்-ஐ எடுக்கிறேன் இன்னும் சில பல நம்பர்களுக்குப் பேசுகிறேன். எல்லாம் தோல்வி தான், இருப்பினும் அவை வெற்றியின் முதல் படி என்று எனக்குப் பாடம் சொன்னவன் சொன்னது செவியில் ஒலிக்கிறது.
இதற்கு மேல் அடி வாங்க மனதில் தெம்பு இல்லை. நாளை பார்க்கலாம். இதோ இந்த ஒரு நாள் முடிந்து விட்டது. ..சேல்ஸ் இன்னும் இரண்டு நாளில் முடிக்க வேண்டும்.
அடிபட்ட பறவையைப் போல் வீடு திரும்புகிறேன்
என் குழந்தைக்கு தின்பண்டம் ஏதேனும் வாங்கி இருக்கலாம்தான்!
மனைவிக்குப் பிடித்த மல்லிகை, அந்த பஞ்சு மிட்டாய்..இன்னும் ஏதோ ஒன்று அவளுக்குப் பிடிக்குமே!
இம்..எல்லாம் சரியாக வரட்டும்..அப்போது பார்..இன்று எனக்கு மனம் சரியில்லை..!
எப்போது தான் இருந்ததாம்...மனைவி கேட்கும் குரல் காதில்...!
சத்தமின்றி படியேறி அழைப்பு மணி அழுத்தி, காத்திருக்கும் பொறுமை இழந்து குட்டைத் தவளையாய் கத்தி வேறு குறை சொல்ல நூறு முறை பார்க்கிறேன். கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விடும் அபாயம் கருதி அடக்கி வாசிக்கையில் எதிர்ப்படும் என் குழந்தை மீது எறிகணைகள் வீசுகிறேன் - கையை ஓங்கி கன்னத்தில் அறைகிறேன். பிறகு நியாயம் கற்பிக்கலாம்-விடலாம்..சதாம் உசேனுக்கே காரணம் தேவைப்படாத உலகில்...இவன் வெறும் சாதாரணன் !
இன்னொரு தேநீர் சுவைக்கத் தருகிறாள்..வேண்டாதது போல் வாங்கி குடிக்கிறேன்..
மனதில் படுகிறது...ரொம்பத்தான் பண்ணுகிறோமோ?
இல்லை ஒரு வேளை..? பால், தயிர், பேப்பர், மளிகை, காய்கறி
என்றவள் பட்டியல் இட எத்தனிப்பதை தடுக்கும் முயற்சியோ..?
விசும்பும் குழந்தையை ஓரக் கண்ணில் பார்க்கிறேன்..
"ஆம்! இன்னொரு விஷயம்..உங்களுக்கொரு கொரியர் டெல்லியில் இருந்து..வந்திருக்கிறது.." என்கிறாள் என்னவள்.
பிரிக்கிறேன்....உள்ளே ரூபாய் பத்தாயிரத்துக்கான காசோலை!
வாராது வந்த 'மணி'..மலர்கிறேன்...
சகஜம் திரும்பி..புன்முறுவல் பூத்து, குழந்தையைக் கிளப்பி கன்னம் கிள்ளிக் கொஞ்சி ஐஸ் கிரீம் வாங்கித் தந்து தாஜா செய்ய குழந்தையின் தளிர்க் கரம் பிடித்துக் கடைக்குக் கிளம்புகிறேன்.
"ஏம்மா! நைட்டுக்கு ஏதாவது தேவையா...ப்ரெட் இருக்கா..முட்டை-பால் ஏதாவது வாங்கி வரவா?"
என்று குரலில் கனிவைக் குழைத்து பேசிக்கொண்டே படியிறங்கிச் செல்கிறேன், ஓரக்கண்ணில் அவளும் குழந்தையும்
என்னை கேலிப் பொருளாய் பார்ப்பதைப் பார்க்காமலே!
-மோகன் பால்கி
Monday, May 3, 2010
Subscribe to:
Posts (Atom)