Sunday, December 5, 2010
பெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது!
பெயரொன்று வைத்தானதால்
வந்த பீழை இது!
வரிஎன்றும் வார்த்தைஎன்றும்
அறிவென்றும் பெரிதென்றும்
இறுமாறும் வெளிஞானம்
உயர்வென்று தடுமாறுது!
விஞ்ஞானம் பெயர் வைக்கும்
நீருக்குள் நெருப்பிருக்க
வழியில்லை என்றெண்ணும்!
பின்னோர் நாள் 'ஆம்' ஆனால்
நெருப்பின்னை 'தொருப்பென்னும்!
வேறென்ன?
அலங்காரப் பொருள் செய்யும்
அதுபோதும் என்றெண்ணும்!
வேறென்ன?
அண்டத்தில் பிண்டமுள
பிண்டத்தில் அண்டமுள
என்றவனை பரிகசித்து
நீர் நெருப்பில் பெருவெடிப்பில்
பனியுருகும் பரிதவிப்பில்
விஞ்ஞானச் சிற்றெறும்பு
பொந்துக்குள் புலம்பி அழும்!
அருவொன்று உருவாகும்
உருவொன்று திடமாகும்
திடம் நீராய் காற்றாகி
மறைந்தங்கு மீண்டுவரும்!
பெயர் மாறும் அதற்கென்றும்
பெயரில்லை !
இயற்கை ஓர் பெரும் வியப்பு!
ஆதியந்தம் அற்ற வழி!
பிரபஞ்ச சமுத்திரத்தில்
சின்னதொரு சிப்பிகள் நாம்!
Monday, May 3, 2010
உங்களுக்கொரு கொரியர் !
தீய்த்துக் கரிக்கும் கத்திரி வெயில்!
கோடை அரவு தீண்டிய வெம்மையிலும் வண்டி சரித்து வாகாய் வளைந்து
அங்கு கூடி இருந்த பாண் பராக் புகையிலை துப்பி சீரழிந்திருந்த
நாயர் டீக்கடை வாசல் பக்கம் நிறுத்துகிறேன்
தேநீர் பருகுவது ஒரு வித escapism என்று சொல்லிக் கொள்ளலாம்தான்...
திவாரி நித்தியாநந்தன் முதல் டெல்லி ஐ நா வரை அலசும் சிகரெட்டுப் புகை..
பட்டும் படாமலும் நானும் அமர்ந்து மூன்று நான்கு மடக்கு தேநீர் முழுங்கிக் கொண்டே செல் போன்-ஐ எடுக்கிறேன் இன்னும் சில பல நம்பர்களுக்குப் பேசுகிறேன். எல்லாம் தோல்வி தான், இருப்பினும் அவை வெற்றியின் முதல் படி என்று எனக்குப் பாடம் சொன்னவன் சொன்னது செவியில் ஒலிக்கிறது.
இதற்கு மேல் அடி வாங்க மனதில் தெம்பு இல்லை. நாளை பார்க்கலாம். இதோ இந்த ஒரு நாள் முடிந்து விட்டது. ..சேல்ஸ் இன்னும் இரண்டு நாளில் முடிக்க வேண்டும்.
அடிபட்ட பறவையைப் போல் வீடு திரும்புகிறேன்
என் குழந்தைக்கு தின்பண்டம் ஏதேனும் வாங்கி இருக்கலாம்தான்!
மனைவிக்குப் பிடித்த மல்லிகை, அந்த பஞ்சு மிட்டாய்..இன்னும் ஏதோ ஒன்று அவளுக்குப் பிடிக்குமே!
இம்..எல்லாம் சரியாக வரட்டும்..அப்போது பார்..இன்று எனக்கு மனம் சரியில்லை..!
எப்போது தான் இருந்ததாம்...மனைவி கேட்கும் குரல் காதில்...!
சத்தமின்றி படியேறி அழைப்பு மணி அழுத்தி, காத்திருக்கும் பொறுமை இழந்து குட்டைத் தவளையாய் கத்தி வேறு குறை சொல்ல நூறு முறை பார்க்கிறேன். கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய்விடும் அபாயம் கருதி அடக்கி வாசிக்கையில் எதிர்ப்படும் என் குழந்தை மீது எறிகணைகள் வீசுகிறேன் - கையை ஓங்கி கன்னத்தில் அறைகிறேன். பிறகு நியாயம் கற்பிக்கலாம்-விடலாம்..சதாம் உசேனுக்கே காரணம் தேவைப்படாத உலகில்...இவன் வெறும் சாதாரணன் !
இன்னொரு தேநீர் சுவைக்கத் தருகிறாள்..வேண்டாதது போல் வாங்கி குடிக்கிறேன்..
மனதில் படுகிறது...ரொம்பத்தான் பண்ணுகிறோமோ?
இல்லை ஒரு வேளை..? பால், தயிர், பேப்பர், மளிகை, காய்கறி
என்றவள் பட்டியல் இட எத்தனிப்பதை தடுக்கும் முயற்சியோ..?
விசும்பும் குழந்தையை ஓரக் கண்ணில் பார்க்கிறேன்..
"ஆம்! இன்னொரு விஷயம்..உங்களுக்கொரு கொரியர் டெல்லியில் இருந்து..வந்திருக்கிறது.." என்கிறாள் என்னவள்.
பிரிக்கிறேன்....உள்ளே ரூபாய் பத்தாயிரத்துக்கான காசோலை!
வாராது வந்த 'மணி'..மலர்கிறேன்...
சகஜம் திரும்பி..புன்முறுவல் பூத்து, குழந்தையைக் கிளப்பி கன்னம் கிள்ளிக் கொஞ்சி ஐஸ் கிரீம் வாங்கித் தந்து தாஜா செய்ய குழந்தையின் தளிர்க் கரம் பிடித்துக் கடைக்குக் கிளம்புகிறேன்.
"ஏம்மா! நைட்டுக்கு ஏதாவது தேவையா...ப்ரெட் இருக்கா..முட்டை-பால் ஏதாவது வாங்கி வரவா?"
என்று குரலில் கனிவைக் குழைத்து பேசிக்கொண்டே படியிறங்கிச் செல்கிறேன், ஓரக்கண்ணில் அவளும் குழந்தையும்
என்னை கேலிப் பொருளாய் பார்ப்பதைப் பார்க்காமலே!
-மோகன் பால்கி
Monday, February 1, 2010
வெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக!
எது பேராண்மை?
இவற்றில்
இரண்டில் ஒன்றைத்
தேர்ந்தெடுக்கும்படி
என்னிடம் சொன்னால்
நான் முதலில்
சுதந்திரத்தையே தேர்ந்தெடுப்பேன்!
ஏனெனில்
சுதந்திர உணர்வற்ற
குறுகிய மனம்
எவ்வாறு
எல்லைகளற்று விரிந்த
இறைவனை அறியும்?
சுதந்திரம் என்பது
நடு-நிலைப் பார்வை!
அனைத்து வித
சித்தாந்த
கூடாரங்களில் இருந்தும்
வெளியேறி
வெட்டவெளியில்
தனியனாய் நின்று
உண்மையை தரிசிக்கும் பேறு!
பொய்மைக் கோட்டைகளைப்
பொடிப்பொடியாக்கும்
பேராண்மை!
-மோகன் பால்கி
தியானம் - "நிகழ்கிறது"! (யாரும் செய்வதில்லை)
என்று எவராவது சொன்னால்
அது மிகவும் தவறான வார்த்தையாகும்!
நம்மை விட பிரம்மாண்டமானதை
நாம் எப்படி செய்ய முடியும்?
அது கிட்டத்தட்ட
"நான் காற்று செய்யப் போகிறேன்"
"நான் தூக்கம் செய்யப் போகிறேன்"
என்பதைப் போன்ற அபத்தமாகும்!
தூக்கத்தை நம்மால் செய்ய முடியாது;
அது நம் உழைப்பின் களைப்பினால்
பரிசாகக் கிடைப்பது!
அதனால்தான் உடல் உழைப்பற்றவர்களால்
சரிவரத் தூங்க முடிவதில்லை!
தூக்கம் என்பது செயல் அன்று!
அது
உழைப்பின் பயன் ஆகும்!
மரக் கன்றுகள் நடுவது நமது செயல்;
அதில் பழம் வருவதோ வராததோ
அதன் பயன் ஆகும்!
நாம் மரக் கன்றுகள் நடலாம் - அதில்
நம்மால் பழம் வரவழைக்க இயலாது!
நாம் தியானத்துக்காக அமரலாம் - ஆனால்
தியானத்தை நம்மால் செய்ய இயலாது!
உண்மை என்னவென்றால்,
அழுக்குகள் நீங்கியவிடத்து
சுத்தம் தெரிவதைப் போன்று
மன மாசுகள் நீங்கியவிடத்து
தியானம் நிகழ்கிறது!
-"வாழ்வும் தியானமும் ".... - 2004
யோஜென் பதிப்பகம்
-மோகன் பால்கி
நிரந்தர அடிமைகளாய் நாம்... !
கோரப் பற்களுக்கிடையில்....
நிரந்தர அடிமைகளாய் நாம்!
ஐந்து முப்பதுக்கு எழுந்து
ஆறேகாலுக்குள் ஆயத்தமாகி
ஆறு இருபத்தைந்து
பேருந்து பிடித்து-
ஏழு பத்து ரயிலைப் பிடித்து
எட்டு நாற்பது பேருந்தை
மீண்டும் ஓடிப் பிடித்து
தொங்கியவாறு பயணம் செய்து
ஒன்பது மணிக்குள்
அலுவலகப் பதிவேட்டில்
கையெழுத்திட வேண்டும்!
இதற்குள் எல்லாம்
சரியாக
நடக்க வேண்டும்!
மீண்டும் ஐந்து மணிக்கே
அலுவலகம் முடிந்தாலும்
மேலே இருப்பவனின்
மெச்சுதல் வேண்டி
ஆறுக்கோ ஏழுக்கோ கிளம்பி
ஒன்பதுக்கோ பத்துக்கோ
வீட்டைச் சேர்கையில்
புறநகர் முழுதும்
மொத்தமாய் தூங்கும் !
வீட்டுப் பாடங்களை
முடித்து விட்டு
அப்பாவின் முகத்தைக் காண
ஆவலாய் காத்திருந்த
குழந்தைகள்
அரைத் தூக்கத்தில்
அரை குறையாய்ப் பேசும்!
அவற்றிற்கும்
அதனதன் கவலை!
காலையில் எழுந்து
மிச்ச சொச்ச பாடங்களை
முடித்து விட்டு
பள்ளிக்கு கிளம்ப வேண்டுமே!
இப்படியாக ஒவ்வொரு நாளும்...
நேரத்தின்
கோரப் பற்களுக்கிடையில்
நிரந்தர
அடிமைகளாய் நாம்!
"இந்தக் கணத்தில்"..1997
மணிமேகலைப் பிரசுரம்
- மோகன் பால்கி
கூடார அடிமைகள்!
பகுத்து அறியாத அறிவு" என்பது
இன்னும் பயன்படுத்தாத
ஒரு வெறும் கருவியே ஆகும்!
எந்த ஒரு மனிதனும் பொருள்களும்
ஆராய்ச்சிக்கு உட்பட்டைவையே!
வெற்று நம்பிக்கைகளும்
வெறும் மூடக் கொள்கைகளும்
எவரையும் முன்னேற்றுவது இல்லை!
தன்னலமும் அதீத எதிர்பார்ப்பும் கொண்ட
சராசரி மக்கள்தான்
ஒரு சாதாரண மனிதனை
கடவுள் தன்மை கொண்டதொரு
பெரும் மகானாக சித்தரிக்க
பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள் !
காரணம் யாதெனில் ,
அது மறைமுகமாக
தனக்கே நன்மை செய்து கொள்வதற்கான
ஒரு 'தலைகீழ் முயற்சியே' எனலாம் !
அதாவது,
'இன்ன சாமியாரின் சீடன் நான்'
என்று பறை சாற்றுவதன் மூலம்
எதுவும் செய்யாமலேயே
ஒரு அங்கீகாரத்தை பெற்று விடும் சுயநலம்
அங்கு மறைந்து கிடக்கிறது!
மேலும்,
கூட்டம் அல்லது கூடாரம் என்பது
நல்லதொரு பொழுது போக்கையும்
ஒரு வித
பாதுகாப்பு உணர்ச்சியையும் தருவதனால்
மனிதர்கள்
தன்விருப்பத்துடனேயே
இதுபோன்ற
"பொய்மை கூடாரங்களைத்"
தேடியலைந்து நிரந்தரமான
அடிமையாகி விடுகிறார்கள் !
உண்மையோவெனில்,
வெட்டவெளியில்
ஒரு
"உண்மை-தேடியின்" வரவுக்காய்
தன்னந்தனியே அது
பொறுமையாய்க்
காத்திருக்கிறது!
-மோகன் பால்கிகாலமற்ற காலம் - அன்பில் உணர்வது!
தேன் மலை-நாடு
எதை நான் எழுத?
தேன் என்று எழுதிட
இனிக்குமோ நாக்கு ?
தேனைப் பற்றி
ஆயிரம் நூல்கள்
ஓதியும் என்ன?
தேடல் உள்ளவர்
ஒருவருக்கேனும்
சொட்டுத் தேனை
சுவைக்கத் தருதலே
'இவனின்' ஆசை!
எத்தனை மலைகள்
எத்தனை இடர்கள்
அத்தனை தாண்டி
கொணர்ந்த தேனிது!
குறைவே எனினும்
நிறைவாய்த் தருவேன்!
இடர்களைப் பற்றி ...
அனுபவம் பற்றி ....
நெடுங்கதை பேசி
நெஞ்சு வலித்திட
நிற்க வைத்திடேன்-
ஒருபோதும் நான்!
இந்நாள் மட்டும்
வெறும் பேச்சினால்
மீண்டும் மீண்டும்
விளைந்தது பேச்சே!
தேனை சுவைத்தவர்
எவரோ ஒருவர்
நெருங்கி ஒரு நாள்
'இதனிடம்' வந்து
"அத்தனை ருசியாய்
அந்நாள் நீவிர்
அளித்தது என்ன-
எங்குஅது உளது-
என் கடன் என்னென"
தாகம் மீக்குற
ஆவல் கண்களை
விரித்திடு நாளில்.....
உவகை நெஞ்சுடன்
கைவிரல் பற்றி
ஆதரவோடு
அழைத்துப் போவேன்-
தெய்வமும் போற்றிடும்
"தேன் மலை- நாடு"!
- மோகன் பால்கி
Kavidhai from MBK Diary
"பனி மலர்கள்" காத்துநிற்போம்!
பத்துவிரல் கொண்டவர்கள் கோனும் இலர்!
புலனைந்தில் ஒன்றிரண்டு மறைந் திருந்தால்
புண்ணியர்கள் செய்த தவம் என்றுரைப்பேன்!
புவனமிதில் கட்செவியும் வாய்ப்பேச்சும் விட்டவர்கள்
புண்ணியர்தாம் ஒருவகையில் முனிவர் இவர் !
தீயவற்றைக் காணுவதும் தீஞ்சொற்கள் பேசுவதும்
ஓயாத பெரும்சப்தம் அனுமதிக்கும் கதவுகளை
ஒருவழியாய் மூடிவிட முற்பிறவி முடிவெடுத்தார்
இன்றிவர்கள் அசைந்தாலும் ஆற்றுவதோ மவுனதவம்!
உயர்மாந்தர் உள்ளொளியால் உயிர்ப்பர் இவர்
இறையவனின் தோட்டத்தில் முன்வாசல் மென்மலர்கள்!
மறவாமல் 'அவன்'படைத்து அவனிக்குத் தந்துவிட்டான்
தருவோம் நம்இதயத்தை "பனி மலர்கள்" காத்துநிற்போம்!
-மோகன் பால்கி
இரயில் பெட்டிகள்
எந்தக் குழந்தையும்
தன் தாய் தந்தையை
"அம்மா" "அப்பா"
என்றழைக்கும் போது
எனக்கு ஏனோ
அந்த
நெடிதுயர்ந்த ஆலமரத்தின்
விழுதுகளே நினைவுக்கு வரும்!
அதுகளே
"மம்மி" "டாடி"
என்று கத்தும் போது
அந்த
ஐரோப்பிய
இரயில் பெட்டிகளே
நினைவுக்கு வருகின்றன;
எப்போது வேண்டுமானாலும்
இறங்கிக் கொள்ள -
கழன்று செல்ல !
"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி
இதுவே அதிகம் - இறைவா!
அய்யனே !
நீ என்
ஆழ்ந்த மையத்தில்
அமைதியாய் அமர்ந்தவன்!
என் மையம் உணர்ந்தவன் !
அது
ஒன்றே போதும்
எனக்கு!
நீ என்னில் இருந்து
என்னை ஆள்பவன் - எந்தன்
ஆண்டவன்!
என் உள்ளும்-புறமும்
யாவுமறிந்தவன் !
மையப் பகுதியில்
கோவில் கொண்டவன்!
போதும் இறைவா!
இதுவே அதிகம்!
இனி,
பிறவி-நூறையும்
பொறுமையாய்க் கடப்பேன்!
"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி
அன்பை அன்பறியும்!
அன்பை அன்பே அறியும் !
அன்பை ஆணவம்
ஒருபோதும் அறிவதில்லை!
நீரை நீர் அறிந்து
கலக்கும் எளிதாக !
நீருக்குள் பாறை
யுகம் யுகமாய் இருந்தாலும்
பாறை கரைவதில்லை;
கரைந்து கலப்பதில்லை!
அம்மட்டோ ?
பாறையுடன் பாறையே
சேர்வதில்லை!
ஆணவமும் ஆணவமும்
அப்படித்தான்!
அன்பு
பெரும் சக்தி-
ஒருசக்தி !
ஆணவம்
தனி இயக்கம்
பிண முயக்கம்!
எளிய ஆணவமும்
புத்தப் பேரன்பை
ஒருக்காலும் அறியாது!
அன்பை
அன்பே அறியும்-
அன்பை
ஆணவம்
ஒருபோதும் அறிவதில்லை!
"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி
உயிரின் நாடகம்!
நால்வேடம் ஏற்றாலும் உயிர்ஒன்றின் நாடகமே
நானென்ப துடலன்று மனமன்று உணர்ந்தாரை
கொனேன்பர் மறையிலைநீர் அருளாளர் !
உள்ளுக்குள் உள்ளாக உள்ளமனம் ஆன்மாவது
உள்ளிருந்து வெளிப்போந்து விரிகையிலே மனமாம்
மனம்விரிய நானென்ற ஆணவமும் அதுதொடர
கன்மமலம் மாயமலம் தொடரும் தானே!
-மோகன் பால்கி
நாளையெனும் மூட- மனம் !
வேளைதனை தள்ளுமது வீண்வாழ்க்கை வாழுமது
காலை எழுந்தமர்ந்து கதிரவனை காண்பதுவும்
சோலைக் குயில்பேச்சை செவியிரண்டில் கேட்பதுவும்
இல்லை தன்வசத்தில் என்றாலும் பேதையது
வில்லை உடைத்தபின்பு ஸ்ரீராமன் திருமணம்போல்
தொல்லைஎலாம் ஒழிந்தபின்னர் கடல்அலைகள் ஓய்ந்தபினர்
தில்லை அமர்ந்திருந்து நல்லதெலாம் செய்வமெனும்!
குளிக்க மறந்ததில்லை குச்சியினால் பல்துலக்கி
களிக்க மறந்ததில்லை ஊர்தோறும் சுற்றிவந்து
புளிக்க பேசுவதை ஒழித்ததில்லை ஊனுடம்பு
தெளிக்க நறுமணங்கள் தவறியதும் இல்லையது!
சேர்க்க மறந்ததில்லை சேர்த்தபொருள் காவல்
பார்க்க மறந்ததில்லை தன்பெண்டு தன்பிள்ளை
கோர்க்க மறந்ததில்லை நவமணிகள் என்றாலும்
மூர்க்கமனம் மூடமது சொல்லும் நாளையென!
-மோகன் பால்கி
பெருஞானம் இதுமுக்தி!
மனமென்ற ஒன்றில்லை மனமே அக்து
தினம்சேரும் எண்ணம்என்று அறிவாய் நீயும்!
உடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ
உறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ?
துண்டித்த விரலன்று யாக்கைக் கிள்ளி
மண்ணிட்ட நகத் துணுக்கு விரலும் இல்லை!
உறுப்புகள் உடல் சேர்ந்த சேர்க்கை யாவும்
தருகின்ற தோற்றம்நம் யாக்கை யாகும்!
நகமின்றி விரல்வாழும் யாக்கை போலும்
விரல்இன்றி உயிர்வாழும் வாழ்க்கை நாளும்!
இருமனிதர் சிலர்சேர்க்கை குழுவாய் மாறும்
பெருங்குழுக்கள் கூடுவ்தை கூட்டம் என்பர்!
மனிதனிலை கூட்டமது சுட்டுச் சொல்லாம்
எண்ணமதும் மனமன்று உறுப்புக்கள் உடலிலவாம்
பிரித்துப் பார்க்கையிலே அவ்வுறுப்பும் ஐம்பூதம்
பொருந்தியது தேரிந்ததுவே மற்றும் ஆங்கே
நீர்நிலமும் தீக்காற்றும் ஆகாயப் பெருவெளியும்
வேறுவேறு எனத்தோன்றி ஒன்றுமற்று ஒன்றாகும்
அவ்வொன்றும் வெறுமைக்குள் சூன்னியத்தி னின்று
ஒவ்வொன்றாய் மறைந்திருந்து வெளியாகும் நன்று!
மாயமிது மாயனவன் லீலையிது காண்கில்லாய்
காயமிதும் இதில்வந்த நானுமதும் எல்லாம்
வெறுமையென அறிகில்லாய் மனமே நீயே!
பெருஞானம் இதுமுக்தி உணர்கின்ற நாளே!
-மோகன் பால்கி
இரு சும்மாய் இரு!
அருளுலகம் அடைதற்கு விடுதல்ஒன்றே அகந்தை
இருப்பதெலாம் இருந்திருக்கும் அதுவேநீ அமரன்நீ
வெறும்பேச்சு விட்டுவிடு இருசும்மாய் இரு!
இடப்பக்கம் அலையூசல் வலப்பக்கம் விரைவுபெறும்
நலம்நிற்க பெருபொருளே தீமைகளும் கொணர்ந்துவரும்
மதகளிறு அங்குசத்தால் வசமாதல் போலும்மே
மூச்சுநெறி சுவாசத்தால் அலையாது நிற்குமனம்!
-மோகன் பால்கி
நான் இயற்கையின் கூறு!
நான் என்னில் வேர் விட்டு
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !
எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !
என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!
சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !
நான்
பஞ்ச பூதங்களின் கலவை
இயற்கையின் அடையாளம்!
ஆதியந்தமற்ற
இப்பிரபஞ்சத்தின்
பிறப்பு இறப்பற்ற
ஓர் உன்னதக் கூறு!
-மோகன் பால்கி
தேசம் செழிப்பாயிற்று!
அது மிகவும் குறுகலான சந்து
முதல் நாள் !
இரண்டு ஆணவக் காரர்கள்
எதிர் பாராமல் சந்தித்துக் கொண்டனர்.
அங்கே
கடும் சண்டை உருவாயிற்று!
சாம்ராஜ்யங்கள் அழிந்தன!
இரண்டாம் நாள்!
ஒரு ஆணவக் காரனும், மற்றொரு நல்லவனும்
எதிர்பாராமல் மோதிக் கொண்டனர்!
அங்கே
வெறும் சலசலப்பு உண்டாயிற்று!
நாட்டில் நல்லதும் நடக்கவில்லை-
கெட்டதும் நடக்கவில்லை!
மூன்றாம் நாள்!
ஒரு நல்லவனும் இன்னொரு நல்லவனும்
எதிர்பாராமல் மோதிக் கொண்டனர்!
'குற்றம் தன்னுடையதே' என்று
இருவரும்
ஒருவரையொருவர் மன்னிப்புக் கேட்டு
மன்றாடினர்!
அங்கே
ஒரு உன்னத நட்பு உருவாயிற்று;
அவர்களது தேசம் செழிப்பாயிற்று!
-மோகன் பால்கி
உண்மையை எப்படிக் கண்டுகொள்வது?
ஒரு மாணவன் குருவைப் பணிந்தான்!
"குருவே! நான் உண்மையை எப்படிக் கண்டு கொள்வது?"
என்று வினவினான்!
குருவும் பதில் சொல்லலானார்!
என் அன்புக்குரிய மாணவனே!
நீ மிகவும் அற்புதமான கேள்வியைக் கேட்டிருக்கிறாய்!
உண்மையை கண்டு கொள்வது மிகவும் எளிதானது;
மிகவும் கடினமானதும் கூட!
ஆம்!
உண்மையை கண்டுகொள்வது
உணமையானவர்களுக்கு
மிகவும் எளிதானது!
உண்மையற்றவர்களுக்கோ
அதைத் தெரிய வாய்ப்பில்லாததனால்
அது மிகவும் கடினமானது!
ஒரு மகா சமுத்திரத்தில்
எண்ணிக்கையற்ற மீன்களுக்கிடையில்
தன் தாயை மீன் குஞ்சுகள் கண்டு கொள்வதைப் போல
உண்மையை உண்மை, தானே கண்டுகொள்ளும்!
இடையில் ஒருவர் இருந்து கொண்டு
இதுவே உன் தாய் என்று
எவரும் உறுதிப் பாத்திரம் தரத் தேவையில்லை !
உண்மையின் குணாம்சமே அதுதான். சிறப்பும் அக்தேயாம் !
உண்மை தன் காலில் தான் நிற்க வல்லது!
உண்மை சுய நிரூபணம் உடையது.
உண்மை சுயம்ப்ரகாசமானது; அடக்கமானது.
இயல்பானது!
அதாவது தங்கத்தை உதாரணத்திற்கு
எடுத்துக்கொள்வோம்!
உண்மைத் தங்கம் பித்தளைகளின்
விளம்பர உதவியை நாடுவதில்லை!
அதைப் பார்த்த மாத்திரத்திலேயே
அது தங்கம்தான் என்று
தானாகவே தெரிந்து விடுகிறது!
ஆனால்,
பொய்க்கோ விளம்பரம், ஆடம்பரம், நடிப்பு
தேவைப்படுகிறது!
மேலும்
பொய்க்கு மின்ன வேண்டிய அவசியம் உள்ளது!
தன்னை பிறர் நம்ப வேண்டும் என்ற காரணத்தால்
தொடர்ந்து ஏதோ ஒரு 'ஒப்பனை' செய்து கொண்டே இருக்கிறது!
எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்பதற்காக பொய்
ஏதேனும் சாகசங்களில் ஈடுபடுகிறது.
மற்றவர்களின் புகழ்ச்சிக்காக
அது எந்நேரமும் ஏங்குகிறது!
ஊரிலேயே பேரழகும் பேரறிவும் ஒருங்கே அமைந்த
ஒரு இளம்பெண்
எல்லாவற்றையும் மறைத்துக்கொண்டு
இழுத்துப் போர்த்தியவாறு வீதியில் நடந்து செல்கிறாள்!
அவளது ஆடை அணிகலன்கள் எளிமையானவை.
யாருடைய கண்களையும் அது உறுத்துவதில்லை!
சப்தமிடும் கொலுசு அணிந்து
மற்றவர்களின் கவனத்தை அவள் கவர்வதில்லை!
கூடை கூடையாய் கொண்டையில் பூக்களை ஏற்றி
வண்டுகளை அவள் ஈர்ப்பதில்லை!
அர்த்தமற்ற வெறும் பேச்சுகளில் சில்லறை சிரிப்புகளை
வலியக் கலந்து காற்றில் விடுவதில்லை!
அவளது வாழ்வும் பயணமும் ஒரு தென்றலின் கவிதை!
அவள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை!
'பாதச் சுவடுகளே தென்படாத'
"பறவை பறந்த வானம் போல"
நிர்மலமானது அவளின் வாழ்க்கை!
உயிரும் உணர்வும் உள்ளவன் மட்டுமே
காத்திருந்து ஒருநாள்
அவளைக் கண்டு கொள்கிறான்!
இறந்து போனவர்களும்
ஆடம்பரச் சீமான்களும்
அவளைக் காணமாட்டார்கள்!
அதே ஊரில் ஒரு குணமிலியும் இருக்கிறாள்!
அழகும் அறிவும் குறைந்தவள்!
எனவே,
அவற்றைத் தன்னிடம் இருப்பதாகக்
காட்டிக்கொள்ள விழைகிறாள்!
அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிகிறாள்!
கண்கூசும் நிறங்கள், சப்தமிடும் அணிகலன்கள் கொண்டு
மற்றவர்களின் கவனத்தை கவர்கிறாள்.
கூடை கூடையாய் தலையில் பூ வைத்துக் கொள்கிறாள்!
வேண்டுமென்றே யாரையோ ஈர்பதற்காக
திடீரென்று வலியச் சிரிக்கிறாள் !
திருத்தமாய் பேசி தன்னை
அறிவு மிகுந்தவளாகக் காட்டிக்கொள்ள,
பாவம்! எப்போதுமே முயற்சிக்கிறாள்!
அவளது வாழ்வும் பயணமும் ஒரு சூறாவளியின் மிச்சம்!
அவளுடைய முழு வாழ்வும் ஒரு திறந்த நூலகப் புத்தகம்;
சிறந்த புத்தகம் அன்று!
தீயவர்களே அவளைப் படிக்கிறார்கள்.
பக்கங்களை மடிப்பதும் கிழிப்பதுமாக
மரியாதை இன்றியும்
நடந்து கொள்கிறார்கள்.
கடைசியில் அந்தப் புத்தகம்
தூக்கி எறியப்பட்டு குப்பைக்குப் போகிறது!
எல்லாப் பொய்களுக்கும் இதுவே முடிவாகும்!
உண்மையோ,
கோவிலின் கர்பக்கிருகத்தில் கம்பீரமாய் வீற்றிருக்கும்!
உண்மையை
உண்மையே கண்டு கொள்ளும்'
என்றார் குரு!
-மோகன் பால்கி
ஏய்! அகண்ட தேசிய வாதியே?
பொதுநலமே மெத்தச் சரி!
தன்னை விரும்பாதவனின் ;
தன்மொழி-இனத்தை விரும்பாதவனின்
பொதுநலத்தை
என்னென்று சொல்லி அழ ?
இயற்கையின் மொழியும் அதுவன்றோ?
ஒளி- ஒலி கூட
அருகில் அதிகமாகவும்
தூரம் செல்லச் செல்ல
அடர்த்தி குறைந்தும்தான்
மறைந்து போகிறது!
மனிதா நீ மட்டும் எவ்வாறு
தலைகீழாய்
இலக்கணம் வகுக்கிறாய்?
முதலில்
"அகில உலக சமத்துவமாம்" !!
அதன்பின்
"அகண்ட தேசியம்"-
"மொழிவாரி மாநிலம்"-
மாவட்ட நலம்,
வட்டம்,
பகுதி,
தெருக்கள்,
அதன் பின்
உன் வீடு
என்வீடு,
என்மக்கள்
அதன் பின் தானாம்
தன் நலம் சுய-நலம் !
ஆகா அருமை!
ஐயோ!
குழப்பத்தின்
ஒட்டுமொத்த குத்தகைக்காரனே!
ஏதோ ஒரு
தூர தேசத்து அம்மாவையும்
வேற்று மொழி நாட்டையும்
அங்கே ஒரு
ஊர் பேர் தெரியாத குடும்பத்தையும்
பற்றிப் பேசி
அவர்களை
பெரிதும் நேசிக்கும்
ஒரு நல்லவன் போல் காட்டி
'நோபிள்' பரிசு பெறத் துடிக்கிறாய்!
உன் சொந்தச்-சோதரர்கள்
துன்பம் காண்கில்லாய்!
உனது
இந்த நடிப்பையும் துடிப்பையும் கண்டு
உன் இனமும்
குடும்பமும்
உன் தாய்மொழி பேசும்
நல்லோர் உலகும்
உள்ளுக்குள்
எள்ளிச் சிரிப்பதை
உன் அறியாமை உள்ளம்
ஒருபோதும்
அறியாதோ நண்பனே ?
- மோகன் பால்கி
இரட்டை நாக்கு "பாதி- சேஷனா"?
'புல்லானாலும் புருஷன்'
எனினும்
எவ்வளவு தூரம் தான்
அவமானங்களை;
அடி உதைகளைத்
தாங்கமுடியும் என்பதை
அந்த
மனைவி அல்லவா
தீர்மானிக்க வேண்டும்?
அப்படிக்கின்றி
அதையெல்லாம் தீர்மானிப்பது
அவளது
புருஷன் கூட இல்லை;
அக்கம் பக்கத்தில் வாழும்
"அதி மேதாவிகள்தான்" என்று
ஏதேனும் நாட்டில்
புது வித பழக்கம்
இருக்கிறதா என்ன?
எங்கு இருக்கிறதோ இல்லையோ
இங்கே இருக்கிறது நண்பனே
அவ்விதப் பழக்கம்!
பக்கத்து நாட்டில்
அவமானப் பட்டு
அடி உதை பட்டு
காலகாலமாய்
உயிர்விடுகின்ற
தாய் மொழித் தமிழரை
இன்னும் படு-நன்றாய்ப் படு!
நக்கிப் பிழைத்து
நாய் போல் வாழ்ந்திடு!
இன்னும் குனிந்து
அடங்கிப் போ என
"மேதைகள்" சிலரிங்கு
சொல்லும் உரிமையை
மமதையை என் சொல?
'பசு வதை' தடுக்க
ஆத்திரப் படுபவர்-
பூச்சி புழுக்களில்
இறைவனை காண்பவர்-
"எல்லாம் பிரம்மம்"
என்று கதைப்பவர்-
இந்தக் கதையிலோ
வீடண ஆழ்வார்!
எப்படி இந்த
இரட்டை அளவுகோல்?
ஐயோ இவர்கள்
மனிதர்கள் தானா ?
இரட்டை நாக்கு
"பாதி- சேஷனா"?
-மோகன் பால்கி
குரு ஒரு கெட்ட பழக்கம் !
எப்போதுமே
ஒரு கெட்ட பழக்கத்துக்கு விலையாக
இன்னொரு கெட்ட பழக்கம்
தவறாமல் வந்து நம்மைச்
சேர்கிறது!
ஆம்!
நல்லதொரு சீடனுக்கு
குருவும் ஒரு கெட்ட பழக்கம்தான்!
விட முடியாத
கடைசி கெட்ட பழக்கம்!
ஆனால்,
குருவே முன் வந்து
தன்னை விடச்சொல்லி
சீடனை
வேறொரு கெட்ட பழக்கத்துக்குள்
வலிந்து
தள்ளி விடுகிறார்!
கடைசி கடைசியான
அந்தக் கெட்ட பழக்கத்துக்கு
பெயர்தான் 'தியானம்'
அல்லது
'இறைவன்'!
-மோகன் பால்கி
கில்ட் பில்டிங்
தியாகராய நகர்
சென்னை
பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்!
ஒரு மர வளர்வும கால முதிர்வும்
இணைந்து தருவது ஒரு பயன் என்னில்
பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்
பல்கி வளர்தலே பெரும்பயன் என்போம் !
ஒரு மரம் வளர்ப்போன் aththanai yukthiyum
அம்மரந்தன்னில் அமுக்கி வளர்ப்பதாம்
நினைப்பில் வருபயன் பொய்மை மகிழ்வே
வாய்மையோவெனில் வெவ்வேறு பூமியில்
விதவிதம் விதைத்து அனுதினம் உடல்மன
வலிகள் பொறுத்து தோட்டம் காப்பவன்
தொய்விலா முயற்சியில் முளைப்பனவற்றில்
வருபொருள் நீட்டம் பன்மைப் பயனாம்!
-மோகன் பால்கி
"எதை' எதாக மாற்ற?
கொஞ்சம் வீரமாய் மாறு!
கொஞ்சம் சண்டை இடு!
வாழ்வின் விதி இதுதான் !
நீயோ,
சண்டையிட வேண்டிய
இடங்களில்-
தருணங்களில்
அடங்கிப் போகிறாய்-
சமரசப் படவேண்டிய போது
சண்டையிட்டு நிற்கிறாய்!
உனது பிரச்சினைதான்
உலகின் பிரச்சினையும்!
விஷயங்களை
வைக்க வேண்டிய இடத்தில் வைக்க
கற்றுக் கொள்!
ஆம்,
கொஞ்சம் வீரமாய் மாறு-
கொஞ்சூண்டு விட்டுக் கொடு!
-மோகன் பால்கி
3rd January 2004
From MBK Diary
காலம் காத்திருக்கிறது - நம் கற்பகத் தருவிற்காய்!
தனித் தன்மை
இப் பிரபஞ்சம் முழுவதிலும்!
ஆதரவற்ற காட்டு மலரிலும்
அற்புதம் கசியும் ஏதோ ஒன்று!
அதை விட மேலாம்
ஏதோ ஒன்று
நமக்குள்ளும் இல்லையா?
நமது விதையிலும்
ஆயிரம் வாய்ப்புகள்...
காலம் காத்திருக்கிறது-மவுனம் சுமந்து !
நம் கற்பகத் தருவின்
பங்களிப்பிற்காக !
-மோகன் பால்கி
10th March 1999
MBK Kavidhai from
Hypnotic Circle-Chennai Bulletin
வெற்றி சத்தியம்!
காற்று ஒன்றா-பல்கிய பலவா ?
சிறிதும் பெரிதுமாய்...
அரங்கம் முழுதும் சிதறிப் பரவும்
ஊதிப் பெரிதாக்கிய காற்றுப் பலூன்கள் !
உற்சாகக் கரை உடைத்து
நுரைத்துப் பொங்கும்
மகிழ்ச்சியின் சப்தம்!
சிரித்த முகங்களும்
வருத்தம் தோய்ந்த
முதுமை மூச்சுயிர்
கரியமிலக் காற்றில்
ஊதிய மானுடர் உப்பிய பலூன்கள்!
உயர்ந்து பறக்கும் கர்வச் சிரிப்பும்
உடைந்து சிதறும் துன்பக் கரிப்புமாய்
தானே அதுவென அதுவும் தானென
அடையாள படுதல்
சிறுவர்கள் ஆடிடும் சீரிய கூத்து!
காற்று காற்று எங்கணும் காற்று!
எத்தனைக் காற்று எது எது காற்று?
மொத்தக் காற்றினில் பதுங்கிய காற்று
பிதுங்கி முழுமையில் ஒன்றிய காற்று
மிச்சக் காற்றை ஊதி நிரப்பிடும்
வித விதமான உயிர்க்குடக் காற்று!
உள்ளுறைக் காற்று மேலுறைக் காற்று!
கட்புலனாகா அமீபா முதல்
கடல்வாழ் பேருயிர் திமிங்கலம் ஈறாய்
இன்னும் அறியாக் கோடி உயிர்களில்
நிரம்பிப் பிரியும் நீர்மக் காற்று- நிர்மலக் காற்று!
உள்ளும் வெளியும் எங்கணும் எங்கணும்..
இடை வெளியற்றதாய்...
காற்றில் உழலும் எனக்கோர் ஐயம் !
காற்று ஒன்றா-பல்கிய பலவா ?
காற்று அலையா? அலையா நிலையா?
காற்று உயிரா - உயிரின் ஊற்றா ?
உயிர்க்கும் காற்றா-நிறுத்தும் கூற்றா?
காற்று நிற்குமுன் பதிலிறு காற்றே!
-மோகன் பால்கி
(25.08.2007)
உள இயல் / தமிழ் கவிதை
- Mohan Balki - YoZenMind Counseling Psychologist, Chennai, India.
- I am primarily a social and analytical thinker. Besides I work as a Counseling psychologist & therapeutic sculptor since 1992. I devised my own Yozen techniques and methods to go to the core & solve 1001 different kinds of challenging psy-issues within few days!! Watch my media interviews. Mail: yozenbalki@gmail.com Mobile: +919840042904 My site: www.yozenmind.com
வயிற்று வலி வேறு, பிரசவ வலி வேறு!
அதனால் சமூகத்துக்கு என்ன பயன்? அவனது "வயிற்றுச்சிக்கல்" வேண்டுமானால்குறையலாம். ஆனால் வயிற்று வலி வேறு, பிரசவ வலி வேறு!
வயிற்றுவலிக்காரனின் 'வெளிப்பாடு' என்பது , எதை வேண்டுமானாலும் அவ்வபோது வெளியே கொட்டிவிடுகின்ற அல்லது தள்ளிவிடுகின்ற வெற்றுப் பிரயத்தனம் .
மாறாக, பிரசவ வலி என்பது ஒரு உயிர்த்தன்மையை அப்படியே சிதையாமல்வெளிக் கொணர்ந்து மனித குலத்துக்கு தருகிற மரண அவஸ்தை-பெருமிதம்! - M B K
தலைப்பு/உள்ளடக்கம்
- change-not (1)
- converter converted (1)
- insoluble plastic (1)
- plastic-water (1)
- water pockets (1)
Popular Posts Here:
-
(சிறு வயதில் சிறுகதைகள் எழுதியதுண்டு. இது திடீர் என்று சில மாதங்களுக்கு முன் வந்த கதை. சும்மா நீங்களும் படியுங்கள்!) தீ ய்த்துக் கரிக்கும...
-
This poem was my agony on seeing scattered plastic Palithin water-pockets!! It was formed in my mind when i was waiting in the Broadway ...
-
எப்போதுமே ஒரு கெட்ட பழக்கத்துக்கு விலையாக இன்னொரு கெட்ட பழக்கம் தவறாமல் வந்து நம்மைச் சேர்கிறது! ஆம்! நல்லதொரு சீடனுக்கு குருவும் ஒரு கெட்ட ...
-
ஒரு மாணவன் குருவைப் பணிந்தான்! "குருவே! நான் உண்மையை எப்படிக் கண்டு கொள்வது?" என்று வினவினான்! குருவும் பதில் சொல்லலானார்! என் அன்...
-
சி றிதும் பெரிதுமாய்... அரங்கம் முழுதும் சிதறிப் பரவும் ஊதிப் பெரிதாக்கிய காற்றுப் பலூன்கள் ! உ ற்சாகக் கரை உடைத்து நுரைத்துப் பொங்கும் மக...
-
சிவகாசி என்றவுடன் தீக்குச்சி குழந்தைஎலாம் சின்னேரம் மனத்திரையில் நம்முள்ளே மின்னலிடும்! சிவகாசி அம்மட்டோ! அச்சகத்தில் அரும்புரட்சி சிரு...
-
மனமென்ற ஒன்றில்லை மனமே அக்து தினம்சேரும் எண்ணம்என்று அறிவாய் நீயும்! உடலென்ற யாதொன்றும் இல்லை அக்தோ உறுப்புகள் ஒன்றிணைந்த கூட்டே அன்றோ? துண்...
-
எந்தக் குழந்தையும் தன் தாய் தந்தையை " அம்மா " " அப்பா " என்றழைக்கும் போது எனக்கு ஏனோ அந்த நெடிதுயர்ந்த ஆலமரத்தின் விழுத...
-
பெயரொன்று வைத்தானதால் வந்த பீழை இது! வரிஎன்றும் வார்த்தைஎன்றும் அறிவென்றும் பெரிதென்றும் இறுமாறும் வெளிஞானம் உயர்வென்று தடுமாறுது...
-
அறிவானது செயலை அண்டியே பிழைப்பு நடத்துகிறது . எவ்வளவுதான் மிகச்சிறந்த அறிவானாலும் அது செயல்படும் மனிதனிடமே சிறப்படைகிறது ! மேலும் , ...
Pages
Blog Titles:
-
▼
2010
(29)
-
►
February
(27)
-
►
Feb 01
(27)
- வெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக!
- எது பேராண்மை?
- தியானம் - "நிகழ்கிறது"! (யாரும் செய்வதில்லை)
- நிரந்தர அடிமைகளாய் நாம்... !
- கூடார அடிமைகள்!
- காலமற்ற காலம் - அன்பில் உணர்வது!
- தேன் மலை-நாடு
- "பனி மலர்கள்" காத்துநிற்போம்!
- இரயில் பெட்டிகள்
- இதுவே அதிகம் - இறைவா!
- அன்பை அன்பறியும்!
- உயிரின் நாடகம்!
- நாளையெனும் மூட- மனம் !
- பெருஞானம் இதுமுக்தி!
- இரு சும்மாய் இரு!
- நான் இயற்கையின் கூறு!
- தேசம் செழிப்பாயிற்று!
- உண்மையை எப்படிக் கண்டுகொள்வது?
- ஏய்! அகண்ட தேசிய வாதியே?
- இரட்டை நாக்கு "பாதி- சேஷனா"?
- குரு ஒரு கெட்ட பழக்கம் !
- பன்மரத் தோப்பில் சிற்சிறு மரங்கள்!
- "எதை' எதாக மாற்ற?
- கொஞ்சம் வீரமாய் மாறு!
- காலம் காத்திருக்கிறது - நம் கற்பகத் தருவிற்காய்!
- வெற்றி சத்தியம்!
- காற்று ஒன்றா-பல்கிய பலவா ?
-
►
Feb 01
(27)
-
►
February
(27)